சிறந்த ஆசிரியருக்கான விருது

Share This News

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் என்பதே எமது வாழ்க்கையின் தாரக மந்திரமாகும். அயராத உழைப்பும் நல்ல எண்ணங்கள் மட்டுமே நம்மை வெற்றி பாதையில் பயணிக்கச் செய்யும் என்பது என் வாழ்வில் யாமறிந்த நிதர்சனமான நிஜம்! என் பெயர் யமுனாதேவி காளீஸ்வரன்.

 

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் என்பதே எமது வாழ்க்கையின் தாரக மந்திரமாகும். அயராத உழைப்பும் நல்ல  எண்ணங்கள் மட்டுமே நம்மை வெற்றி பாதையில் பயணிக்கச் செய்யும் என்பது என் வாழ்வில் யாமறிந்த நிதர்சனமான நிஜம்! என் பெயர் யமுனாதேவி காளீஸ்வரன். திரு.காளீஸ்வரன் நந்தன் மற்றும் திருமதி.வசந்தி நரசப்பன் தம்பதியர்களுக்கு ,29 ஆம் திகதி நவம்பர் மாதம் 1989 இல் கிள்ளான் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்தேன்.


என் தந்தையார் ஏற்றுமதி இறக்குமதி துறைசார்ந்த ஒரு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார்.அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ,ஜுன் 21 ஆம் திகதி இயற்கை எய்தினார். என் தாயார் ஒர் இல்லத்தரசி.எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் தம்பி ஒருவர் இருக்கிறார்.  மூத்த அண்ணனின் பெயர் பிரகாஷ்நாதன் காளீஸ்வரன். இளைய அண்ணனின் பெயர் தில்லைநாதன் காளீஸ்வரன். எனது தம்பியின் பெயர் விக்னேஷ்நாதன் காளீஸ்வரன். 2015 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டு எனக்கு மூத்த மகன் நிதுர்ஷனும் , 2008 ஆம் ஆண்டு எனது இளைய மகள் டுர்காஶ்ரீ யும் பிறந்தனர்.


மூத்தவர் பத்து வயது மற்றும் இளையவள் எட்டு வயது.நான் ஒரு தனித்து வாழும் தாயார்.நான் எனது ஆரம்பக் கல்வியினை  அதாவது, 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தேசிய வகை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பயின்றேன். அதனைத் தொடர்ந்து 2002 ஆண்டு தொடங்கி 2006 வரை படிவம் ஒன்று முதல் ஐந்து வரை கம்போங் ஜாவா இடைநிலைப் பள்ளியில் கல்வி கற்றேன். பின்பு, 2007 தொடங்கி 2008 வரை,எஸ்.டி.பி.எம் பயின்றேன்.


சிறுவயதிலிருந்தே நான் வழக்கறிஞர்  ஆக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்தேன். 2018 ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டம் சார்ந்த படிப்பினைத் தொடங்கினேன் .ஆனால்,குடும்ப சூழல் காரணமாக படிப்பினைத் தொடர்வது முயற்கொம்பாகியது.அந்த கனவு, நீதி, நேர்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு என்னுள் ஆழமாக பதிந்தது. காலப்போக்கில், கல்வித் துறையின் மீது ஏற்பட்ட ஆழ்ந்த ஈர்ப்பு என்னை ஆசிரியர் தொழிலுக்கு வழிநடத்தியது. 2009 ஆம் ஆண்டு தேசிய வகை புக்கிட் இராஜா தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினேன். 2010 ஆம் ஆண்டு தேசிய வகை பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி பணிபுரிய தொடங்கி, கடந்த 27.10.2025 வரை சுமார் 16 ஆண்டுகள் சேவையாற்றினேன்.

அக்காலக்கட்டத்தில் 11 ஆண்டுகள் GPM (Guru Perpustaakaan dan Media) எனும் பொறுப்பை வகித்தேன். நான் ஆசிரியர் துறையில் பட்டம் பெற்றுள்ளதுடன், American Sport Academyயில் இருந்து Diploma in Sports and Physical Education பட்டத்தையும் பெற்றேன். மேலும், PITO English  சான்றிதழ் மூலம் ஆங்கில மொழி கற்பித்தலில் சிறப்பு திறன் பெற்றுள்ளேன்.


தற்போது நான் UNITAR பல்கழைக்கழகத்தில் TESL-TEACHING ENGLISH AS A SECOND LANGUAGE பட்டப் படிப்பை மேற்கொள்கிறேன்.கல்வி மற்றும் விளையாட்டு இரண்டையும் ஒருங்கிணைத்து மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற வேன்டும் என்பதே எமது தலையாய நோக்கமாகும். 2020 ஆம் ஆண்டில் ,கல்வி மற்றும் நிர்வாக சேவைகளுக்கான அங்கீகாரமாக எமக்கு Anugerah Perkhidmatan Cemerlang (APC) வழங்கப்பட்டது. இந்த விருது, என் பணியை மென்மேலும் சிறப்பாகச் செய்ய ஊக்கமாக அமைந்தது.

2015 ஆம்  ஆண்டில் ,நான் கபடி போட்டி விளையாட்டின் அதிகாரியாக ஆவதற்கு பயிற்சிப் பெற்று அதில் சிறந்த தேர்ச்சிப் பெற்றேன். மலேசியாவில் பல மாநிலங்களில் நடைப்பெற்ற அனைத்து கபடிப் போட்டியிலும் நான் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளேன். 2022 &2024 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மற்றும் சரவாக்கில் நடைப்பெற்ற சுக்மாவிலும் (SUKMA) பணியாற்றினேன், 2023 ஆம் ஆண்டு தாய்லாந்தில்  நடைபெற்ற BEACH KABADDI THAILAND OPEN 2023 இல் நடுவராகப் பணியாற்றினேன்.


2023 ஆம் ஆண்டில் கிள்ளான் மாவட்ட அளவிலான கபடி போட்டியினை ஏற்று நடத்தும் செயலாளராகப் பணிபுரிந்தேன். அவ்வாண்டு கிள்ளான் மாவட்டத்தைப் பிரதிநிதித்து மாணவர்களை அழைத்துச் சென்று அம்மாணவர்கள் மாநில அளவில் முதலிடத்தை வென்றனர்.  2024 ஆம் ஆண்டில் 12 பிப்ரவரி தொடங்கி 16 பிப்ரவரி வரை ஈரானில் நடைபெற்ற 3rd International Kabaddi Referee/Technical Official Course யில் பங்கேற்று  தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்றேன். 2024 ஆம் ஆண்டு 13 முதல் 18 ஜூன் வரை  பாலி,இன்டொனெசியாவில் நடைபெற்ற  INDONESIA OPEN INTERNATIONAL KABADDI CHAMPIONSHIP யில் நடுவராகப் பணியாற்றினேன். 2025 ஆம் ஆண்டு ஜுன் மாதம்  ‘கோ கோ’ எனும் விளையாட்டுத் துறையில் நடுவர் தொடர்பாக டெல்லி,இந்தியாவில் நடைபெற்ற பட்டறை மற்றும் பயிற்சியில் ஈடுபட ஒரு வாய்ப்பு கிட்டியது. சுமார் 10 நாட்கள் நடைபெற்ற அப்பட்டறையில் கலந்து கொண்டு பல  நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வாய்ப்புக் கிட்டியது.


விளையாட்டுத் துறையைத் தாண்டி,சிறுவயது முதலே எனக்கு   பரதக் கலையில் அதீத ஆர்வம் உண்டு. வேலை பளு,குழந்தைகைகள் பராமரிப்பு ,குடும்ப பொறுப்புகள் என பல விஷயங்களை அன்றாட வாழ்க்கையில் நான் எதிர்கொண்டாலும் பரதக் கலை எனக்கு அதீத மன அமைதியையும் மன மகிழ்வையும் தந்தது. 2023 ஆம் ஆண்டில் நான் முறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டு சலங்கை பூஜையை நிறைவு செய்தேன். அதனைத் தொடர்ந்து,எனக்கு சிதம்பரநாதர் கோவிலில் நடனமாட வாய்ப்பு கிட்டியது.  ஆகவே,கலைகளைக் கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. கடந்தான்டு 27ஆம் திகதி அக்டோபர் மாதம் ,தேசிய வகை மெதடிஸ்ட் காப்பார் தமிழ்ப்பள்ளியில் இணைப்பாடத்  துறைத் துணைத்தலைமையாசிரியராகப்  பதவி உயர்வு வழங்கப்பட்து.கல்வி, நிர்வாகம் மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பணியாற்றுவது என் வாழ்க்கையின் முக்கிய அடையாளமாகக் கொண்டு என் கடமையைச் செய்து வருகிறேன்.


ஒரு கல்வியாளராக மட்டுமல்லாமல், நிர்வாகியும், வழிகாட்டியும் ஆக இருந்து, மாணவர்களை ஒழுக்கமுள்ள, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் சமுதாயத்திற்கு பயனுள்ள மனிதர்களாக உருவாக்குவதே என் வாழ்நாள் இலக்காகும். கல்வியே ஒரு நாட்டின் எதிர்காலம் என்பதை மனதில் கொண்டு, அந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் பணியில் பங்கு பெறுவது எனக்கு பெருமை அளிக்கிறது.


சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு.  (குறள் 597)

எனும் குறளுக்கேற்ப உள்ளத்தில் வலிமை உடையவர்கள்  அழியும்  தருணத்திலும்  தளரமாட்டார்கள் . அம்புகளால்  மறைத்தாலும்  அடங்காது செயல்படும் ஆண்யானை போன்று என்பதற்கிணங்க என் வாழ்க்கைப் பாதையைக் கடந்து வந்தேன்…இனி வரும் காலங்களிலும் அப்படியே!

நன்றி,வணக்கம்.